கோவில் வரலாறு
கடையநல்லூர் ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராமர் காரியமாக யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான எம் பெருமான் ஸ்ரீ அனுமன், ஸ்ரீராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்தகுகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர்.அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர். இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்.
சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, தாங்கள் யார்? என்று கேட்கிறார். அதற்கு சுயம்பிரபை முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான். ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனை கொன்று விட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் ராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம் என்று பிரம்மன் கூறினார். எனவே இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன், என்றாள் சுயம்பிரபை.
ஆனால் அனுமனோ, ‘தாயே, சீதா தேவியை ராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் ராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்’ என்று கூறி விடை பெற்று சென்றார்.
இலங்கையில் வெற்றி கண்ட ராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் ராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார். அனுமன் கூறியதைக்கேட்ட ராமரும், “ஆஞ்சநேயா, பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்’ என்றார். ராமர் பிரதிஷ்டை செய்த அனுமன் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது.
ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் வந்தார் ராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனை பிரதிஷ்டை செய்து, நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார் ராமர்.
எந்த இடத்தில் ராமரின் திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமான் நிச்சயம் இருப்பார். அதேபோல் அனுமன் நாமம் ஒலிக்கின்ற இடங்களில் ராமபிரான் இல்லாமலா போய் விடுவார்.
இதனால் தான் இக்கோயிலில் ராமச்சந்திர மூர்த்தி, சீதை, லட்சுமணன், அனுமாரோடு சன்னதியில் காட்சி தருகிறார்.
எம்பெருமான் நடத்தும் அதிசயங்கள்:
[i] 1968ஆம் வருடத்தில் ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாள், அதிகாலை மூன்று மணி. தென்காசி-விருதுநகர் இரயில் பாதையில் கடைய நல்லூர் ஸ்டேஷன் இருளில் மூழ்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகும் விபரீதத்தை சற்றும் அறியாத ஒரு பயணிகள் வண்டி மெயின் லைனில் நின்று கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டர் வரவிருக்கும் கொல்லம்-சென்னை மெயிலை வரவேற்க பிளாட்பாரம் பக்கம் வருகிறார். தூரத்தில் மெயிலின் பிரகாசமான மின்விளக்கு வெளிச்சத்தோடு மிக வேகமாக வரும் ஓசையும் கேட்கிறது.
‘தினமும் வருகிற வண்டிதானே’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர் ரயில் தடமாறி வருவது கண்டு திகைத்து நின்று விட்டார். அடுத்த சில நொடிகளில் ‘டமார்’ என்ற சத்தம் விண்ணைப் பிளந்தது. ஸ்டேஷனே அல்லோலகல்லோலமாகிவிட்டது. பயணிகளின் ‘குய்யோ முறையோ’ சத்தம் வயிற்றைக் கலக்கியது.
எக்ஸ்பிரசும் பாசஞ்சரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விட்டன. இரண்டு எஞ்சின்களும் முட்டிக்கொண்டு அப்படியே மேலே எழுந்து முட்டிக் கொண்டு நின்றன. தூரத்தில் இருந்து பார்த்தால் இரண்டு கைகள் கூப்பிட்டுக் கொண்டு யாரையோ நமஸ்கரித்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
இந்த செய்தி கேட்டு விரைந்து வந்த மதுரை டிவிஷனல் சூப்பிரெண்டுக்கு இரண்டு எஞ்சின்களும் நின்ற நிலை யாரையோ கை கூப்பி வணங்கி நிற்பது போலத்தான் தோன்றியது.“இவ்வளவு பயங்கர வேகத்தில் இரயில்கள் மோதியதில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படி ஒருவர் கூட பலியாகாமல் தப்ப முடிந்தது?” என்று அவருக்கு ஒரே ஆச்சரியம்.
முதல் உதவிகள், தேவையான மாற்று நடவடிக்கைகளுக்கெல்லாம் உத்தரவிட்டு அவர், விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு உதவி செய்ய ஓடி வந்திருந்த கடைய நல்லூர் மக்களிடம் போய்க் கேட்டார்.
“இந்த சுற்று வட்டாரத்தில் ஏதாவது கோயில் இருக்கிறதா?”
“ஆமாம்! அதோ பாருங்கள்!” என்று தூரத்தில் பச்சைப்பசேல் என்று பரந்து விரிந்து கிடக்கும் வயல்களுக்கிடையே ஒரு மண்டபம் போலத் தெரிந்த கோயிலைக் காட்டினார்கள்.
கூப்பிய கை போல நின்ற எஞ்சின்கள், ஸ்டேஷன், கோயில் மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைக் கண்டு சூப்பிரண்டெண்ட் ஆச்சரியமடைந்தார். அந்த கோயிலில் உள்ள தெய்வத்தின் நேர்பார்வை காரணமாகவே இந்த பெரிய விபத்து சாதாரணமாகிப் போனது என்று அவரது மனசுக்குப்பட்டது.
“அது என்ன கோயில்? – என்று கேட்டார்.
“ஆஞ்சநேயர் கோயில்” என்று பதில் வந்தது. விபத்து சம்பந்தமான நடவடிக்கைகளை எடுத்து விட்டு கோயிலை நோக்கி விரைந்தார்.
பாதிப் பனைமர உயரத்துக்கு மேடான ஊருக்குப் போகும் முன் மண் ரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு சரிவில் கஷ்டப்பட்டு இறங்கி கோயிலை நோக்கி நடந்தார். ஒரு கற்குளம், அதன் கரையில் அனுமன் கோயில். கிழக்கு வாசல் வழியாக உள்ளே போய் இடப்பக்கம் திரும்பி, வலப்பக்கம் பார்த்தால் தெற்கு பார்த்த ஒரு தனிக்கோயில் – சந்நிதி கருவறை அதில் ஆள் உயரத்திற்கு கற்படிவத்தில் சிற்பமாக செதுக்கிய வித்தியாசமான ஓர் அனுமன்.
“தூக்கிய வாலில் மணி, ஓரடி முன் வைத்தது போல தோற்றம். நம்மை நோக்கிய சற்று வித்தியாசமான முகபாவம். மிக வித்தியாசமான இன்னோர் அம்சம், வலக்கை அபயஹஸ்தமாகவும், இடக்கை இடுப்பிலுமாக இருப்பது”.
அதிகாரி மெய்பரவசத்துடன் பார்த்துக் கொண்டே, கை கூப்பியபடியே வெகு நேரம் நின்றார். அவர் தெய்வ பக்தியுடையவர். அனுமனை நேசிக்காதவர் யார்? அதுவும் எப்பேர்பட்ட பேராபத்தை இன்று தவிர்த்துக் காத்து விட்டார். அதிகாரியின் மனம் உருகி நின்றது.
“என்ன செய்தால் இந்த பெருமானுக்கு ப்ரீதி ஏற்படும்?” என்று கேட்டார்.
“வடை, பாயசம்” என்று பதில் வந்தது.
“என் செலவில் வடை, பாயச நைவேத்தியத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றுச் சொல்லி பணத்தைக் கொடுத்து விட்டு பிரசாதத்துடன் திரும்பிப் போனார் அந்த அதிகாரி.
[ii] கடைய நல்லூரில் முனிஷிபல் கமிஷனராக இருந்த ஒருவர் பக்கா நாத்திகராக இருந்தார். அவருடைய குழந்தைக்கு கடும் நோய் வந்து, என்னென்னவோ செய்தும் கவலைக்கிடமாகிவிட்டது. “கவலைப்படாதீர்கள், இந்த பிரசாதத்தைக் கொண்டு போய் கொடுங்கள்” என்று கொடுத்த பிரசாதத்தை மகள் மீதிருந்த பாசத்தால் எதையும் பற்றிக் கொள்ளத் துணிந்து விட்ட மனமும் அப்படியே செய்தது. குழந்தை பிழைத்து விட்டது.
செங்கல்பட்டிற்கு மாறிப்போனவர் அங்கிருந்து வந்து குழந்தையை எம்பெருமான் ஸ்ரீ அனுமனின் திருவடிமுன் கிடத்தி வடை, பாயசம் வைத்து விட்டு ஆனந்தக் கண்ணீருடன் போனார்.
[iii] இந்த ஊருக்கு வரும் கமிஷனர்கள் அனைவருக்கும் இந்த அனுமனுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது. இன்னொரு கமிஷனர் மிகுந்த பக்தியுடன் இருந்தார். அவரை பெரிய குளத்திற்கு மாற்ற உத்தரவு வந்து விட்டது. அவருக்கோ பிள்ளைகள் படிப்பு காரணமாக போக இஷ்டமில்லை. போவதை என்ன முயன்றும் தவிர்க்கவும் முடியவில்லை.
எம்பெருமான் சந்நிதியில் நின்று “உன்னை விட்டு எப்படிப் போவேன்?” என்று கதறியழுதார். இரவு சாமான்களை எடுத்துச் செல்ல டெம்போவும் வந்துவிட்டது. காலையில் புறப்பட வேண்டியதுதான் பாக்கி. இவரோ கண்ணீர் விட்டுக் கொண்டு கதறுகிறார். ஓர்ஆள் ஓடி வந்து “டெம்போ ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்கிறது சார்” என்றான். எவ்வளவோ முயன்றும் வண்டி நகரவே இல்லை. சிறிது நேரத்தில் அன்றைய ‘இந்து நாளிதழ்’ வருகிறது. அதில் ஒரு செய்தி ‘பெரிய குளத்திற்கு வேறு ஒருவரை போஸ்ட் செய்திருப்பதாக அதிகாரிகள் மாற்றம் பகுதியில் வெளிவந்திருந்தது”.
[iv] இப்படிப்பட்ட ஆனந்த அதிசயங்களை தம்மை நாடி வந்து சரணாகதியடைந்தவர்களின் வாழ்க்கையில் அற்புதமான திருப்பங்களை நிகழ்த்திக் காட்டும் எம்பெருமானுக்கு வெகு காலமாக அர்ச்சகப் பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கே. என். ராம நாராயண ஐயர்.
இவரது வாழ்க்கையில் திடீரென்று கருமேகம் வந்து சூழத் தொடங்கியது. ஆம், இவரது மனைவியான சீதாலட்சுமியின் இரண்டு பாலகங்களில் ஒன்றில் வலி. ஆரம்பத்தில் குறைவாக இருந்த வலி, அதிகமாகிக் கொண்டே வர ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியதாயிற்று.
திருவனந்தபுரம் கான்ஸர் செண்டருக்கு கொண்டு போனார்கள். அங்கு ‘பிரஸ்ட் கான்ஸர்’ என்றார்கள். ஒரு தொகையைச் சொல்லிப் பணத்துடன் வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள். இவரிடமோ அவ்வளவு தொகை இல்லை. ஆபரேஷனுக்கு பிறகும் சில வாரங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்களும் இல்லை. இதனால் காலதாமதாகிச் சுமார் ஆறு மாதம் ஓடி விட்டது.
இவர் மிகவும் மனமுடைந்து விட்டார். மனைவியைக் காப்பாற்ற இந்த அனுமனைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். சஞ்சீவி மலையையே தூக்கி வந்து உயிர்களைக் காப்பாற்றிய உன்னால் மட்டுமே என் மனைவியைக் காப்பாற்ற முடியும். உன்னையே சரணாகதி அடைந்த எனக்கு உன்னைத் தவிர வேறு துணை யாருமில்லை என்று தினமும் அழுது, துதித்து ஒவ்வொரு பொட்டாக வரிசையாக வாலில் பொட்டு வைக்க ஆரம்பித்தார்.
பொட்டானது கடைசி நிலைக்கு வந்த போது ஆஸ்பத்திரிக்கு மீண்டும் மனைவியைக் கொண்டு போய் டெஸ்ட் எடுத்தார்கள். டெஸ்டில் கான்ஸர் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. தவிர எவ்வித வலியும் இல்லை சீதாலட்சுமிக்கு.
டாக்டர்களோ இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று திகைத்துப் போய் விட்டார்கள். அதற்குப் பிறகும் எம்பெருமான் அனுமனின் வாலில் பொட்டு வைப்பதை நிறுத்தவில்லை.
இத்தகைய எம்பெருமான் அனுமனுக்கு வடை, பாயசம் செய்வதாக உண்மையான கோரிக்கைகளை முன் வைத்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் நடந்து விடும். இது அனுபவப்பூர்வமான உண்மை.
ஒரு தடவை போட்ட வடையை எம்பெருமான் சாப்பிட்டும் இருக்கிறார். ஒரு பிரார்த்தனைக்காக வடை மாலையை ஒருவர் சார்த்தியிருக்கிறார். அன்று எங்கிருந்தோ வந்த பெரிய குரங்கு ஒன்று கோயில் மீது சுற்றுக் கொண்டிருந்தது. வடை மாலை சாத்தின பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்த போது அதில் ஒரு பகுதியும், பழங்களும் குரங்கு கடித்தது போல சிதைந்தும் இருந்ததாம்.
ஆக, இப்படி அன்றிலிருந்து இன்றுவரை தன்னை நாடி வரும் உண்மையான பக்தர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றித் தரும் எல்லாம் வல்ல எம்பெருமான் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி போகும் வழியில் கடையநல்லூர் என்ற ஊரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் வயல்களுக்கு மத்தியில் நின்று அருள் பாலிக்கிறார் என்பதை விட அருளாட்சி செய்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும்.
கோவில் தொலைபேசி எண்: 04633-292250
தொடர்புக்கு
Dr எம். ஆர். ஆனந்தவேல்,
அமானுஷ்ய ஆய்வு மையம்,
ப. எண்: 5, புது எண்: 8 ராகவேந்திரா நகர், IOB காலனி,
பாரதியார் பல்கலைக்கழகம் அஞ்சல்,
மருதமலை,
கோவை – 641 046
தொலைபேசி: +91 96552 69723 / +91 78712 31344
ஈமெயில்: tarot.anandavelmr@gmail.com